Wednesday, April 28, 2021

மாம்பாக்கம் முருக நாதீஸ்வரர்

மாம்பாக்கம்
முருக நாதீஸ்வரர்
பெரிதாக ஏதும் பழமையின் சின்னம் இல்லாமல் முற்றிலும் புதுமையும் ஏற்காமல்
கடந்த கால நினைவுகளில் தன் காலத்தை கழிக்கும் ராஜராஜர் காலத்திய கற்றளி.
மாம்பாக்கதிலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் வலதுபுறமாக சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
"ஸ்ரீ திருமகள் போல" என தொடங்கும் ராஜராஜர் கல்வெட்டு ஒன்று இக்கோவிலுக்கு விளக்கு எரிக்க முருகன் கலியன் என்பவர் தானம் அளித்த தகவலை கூறுகிறது.கல்வெட்டு சிதைந்து உள்ளதால் பிற தகவல்கள் தெரியவில்லை.
இவ்வூர் இன்று வழங்கும் பெயரிலே புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு பிரிவில் இருந்துள்ளது.
 இங்குள்ள மற்றொரு துண்டு கல்வெட்டில் ஸ்ரீ ஆதித்தன் என்ற பெயர் மட்டும் உள்ளது.

Wednesday, December 16, 2020

தாழம்பூ

 தாழம்பூ கபிலரால் பாடப்பட்ட 99 மலர்களில் ஒன்று.தாழம்பூ நெய்தல் நிலத்தில் அதிகமாக காணப்படும். கபிலர் தன் பாடலில் 83 வது மலராக தாழம்பூவை குறிப்பிடுகிறார்.இதன் முட்கள் கையை தைப்பதால் தாழம்பூவிற்கு கைதை என்றும் மற்றொரு பெயர் உண்டு.

கபிலரின் குறிஞ்சிபாடல் அல்லாது பட்டினப்பாலை,அகநானூறு,குறுந்தொகை, திருத்தொண்டர் தொகை ஆகிய இலக்கியங்களில் பாடல் பெற்ற சிறப்பு உடையது தாழை.

இது புதர் போல வளரக்கூடிய குருந்தாவரம். கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரங்களில் வளர்க்கப்படுகிறது. 

அகநானூறு-353

தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்

பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை

தலை விரித்த பேய் போல தாழையின் இதழ்கள் இருப்பதாக நக்கண்ணார் உவமை கூறுகிறார்.

பட்டினப்பாலை

அணங்கு விழா நாட்களில் பரதவர் கடலுக்கு செல்வத்தில்லையாம். தம் மனைவியருடன் காதலோடு கூடி மகிழ்ந்திருப்பார்கள் அதன் அடையாளமாக சினை சுறா மீனின் கொம்பு வீட்டின் முன்பாக நடப்பட்டு இருக்கும். அந்த அணங்கு விழா நாட்களில் பரத பெண்கள் தங்கள் தலையில் தாழம்பூவை சூடி கொள்வார்களாம். அவ்வாறாக அமைந்த பட்டினபாலை பாடல் வர. 

"கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,

நடு கல்லின் அரண் போல,

நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய 

குறுங் கூரைக் குடி நாப்பண்;

நிலவு அடைந்த இருள் போல,

வலை உணங்கும் மணல் முன்றில்;

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த

வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர்,

சினைச் சுறவின் கோடு நட்டு,

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,

மடல் தாழை மலர் மலைந்தும்;

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்;

புன் தலை இரும் பரதவர் 

பைந் தழை மா மகளிரொடு,

பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,

உவவு மடிந்து, உண்டு ஆடியும்.  


நெய்தல் திணையில் கூடல் வரும் வேளையில் எல்லாம் தாழம்பூ நீங்காமல் இடம் பெரும் போலும்!


குறுந்தொகை:

"யாரணங் குற்றனை கடலே பூழியர்    

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன 

மீனார் குருகின் கானலம் பெருந்துறை 

வெள்வீத் தாழை திரையலை  

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே"


வெள்வீத் தாழை - வெள்ளி பூக்களை உடைய தாழை.

காதல் காமத்தின் மிகுதியால் ,தலைவனின் பிரிவை தாங்க முடியாது நள்ளிரவில் அரற்றும் தலைவி கடலை நோக்கி ,தான் நள்ளிரவில் தூங்காது தலைவனால் அணங்குற்றது போல் கடலே நீ யாரால் அணங்குற்றாய் என வினவுவதாய் அமைந்துள்ளது பாடல்.

கடலோரத்துத் தாழையை அலைகள் ஓயாமல் அலைக்கழித்துக் கொண்டிருப்பது, தலைவியைக் காமத்துன்பம் அலைக்கழிப்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.

மற்றும் ஒரு குறுந்தொகை பாடல்,

"வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை 
குருகுள ரிறிகின் விரிபுதோ டவிழும் 

கான னண்ணிய சிறுகுடி முன்றிற்  

றிரைவந்து பெயரு மென்பநத் துறந்து 

நெடுஞ்சே ணாட்டா ராயினும்"


தாழையின் விழுதுகள் நாரைகள் கோதுகின்ற சிறகை போல இருந்ததாக உவமை கூறப்படுகிறது.

பாடலின் பொருள் சிறிது எனக்கும் பொருத்தமானதாகவே உள்ளது.

தலைவர் நின்னை வரைந்து கொள்வதற்கு முன் அவர் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டினராகி இருப்பவும் நீ ஆற்றி இருந்தது நின் வன்மையைக் காட்டுகின்றது” என்று தோழி தலைவியைப் புகழ, தலைவி, “அவர் நெடுந்தூரத்தில் இருந்தாராயினும் என் நெஞ்சிற்கு அணியராக இருந்தார். அதனாலும் அவர் நாட்டிற்கும் எங்கள் ஊருக்கும்அலைகளின் தொடர்பு இருந்தமையாலும் ஆற்றி இருந்தேன்”என்று தலைவி கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

நற்றிணை:


 கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி

மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,

வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,

படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,             

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;

கேட்டிசின் வாழி, தோழி! 


நற்றிணையில் நெய்தல் திணையில் பாடல் 78. தலைவனின் வரவு கண்டு தலைவி மகிழ்ச்சியில் பாடுவதாக அமைந்துள்ளது.

 "வெளிச்சம் இருக்கும் உப்பங்கழி,கொம்பு உள்ள சுறாமீன் மேயும் உப்பங்கழி. நீலமணி நிறத்தில் நெய்தல் பூக்கள் நிறைய பூத்திருக்கின்றன. அதில் புன்னைமரம் தன் பொன்னிறம் கொண்ட பூக்களைத் தூவுகிறது. அங்கே  விழுது தொங்கும் தாழம்பூவின் மணம் கமழ்கிறது. மாலை நேரம் வந்துவிட்டது. வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனிமையில் இருக்கிறோமே என்னும் நினைவலைத் துன்பம் வருவது இயல்பே. இந்தத் துன்பத்திலிருந்து இப்போது தப்பிவிட்டோம் தலைவனின் வருகையால்"

  நற்றிணை-211

"எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்🎂டுத்

துறு கடற் தலைய தோடு பொதி தாழை"

தாழையை பார்த்து நாரை என்று எண்ணி மீன் அஞ்சுவதாக அமைந்துள்ளது.

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சங்க இலக்கியத்தில் நெய்தல் திணையில் பெரும் அளவில் பாடப்பட்ட பூ தாழம்பூ மட்டுமே.

சங்க இலக்கியம் மட்டுமன்றி தற்கால திரைப்பட பாடல்களில் கூட அதிகளவில் பாடப்பட்டுள்ளது.

1.தாழயாம் பூ முடிஞ்சு தடம் பார்த்து நடை நடந்து - பாக பிரிவினை

2.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா - முள்ளும் மலரும்

3. தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சி பேசு - கை கொடுக்கும் கை

4.தளம்பூவே தங்க நிலாவேய் - ராதா திலகம்

5.செந்தூரபூவே - செந்தூரப்பூ

6.இப்பவேய் இப்பவேய் - ராமன் தேடிய சீதை

7.கண்ணில் வந்து- நாடோடி மன்னன்

8. தாழம்பூ சேலை மானே உன் மேல

9.வெள்ளி மலரே வெள்ளி மலரே - ஜோடி


அத்தனை சிறப்பு உடைய தாழை இன்று அருகி வரும் இனமாக மாறி கொண்டு இருப்பது மிக பெரிய சோகம். 2000 ஆண்டுகளாக இலக்கியங்களில்  பாடப்பட்டு ,மக்களால் கொண்டாடப்பட்ட  தாழை இன்று நில ஆக்கிரமிப்புகளாலும்,நீர் மாசுபாட்டாலும் அருகி வரும் இனமாக மாறிவிட்டது.